Powered By Blogger

Saturday 24 March 2012

தமிழர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சமூக மாற்றம்

தமிழர்களின் பண்டையச் சிறப்பினை சொல்லில் மட்டும் வர்ணித்திட முடியாது. ஆயக்கலைகள் அறுபத்து நான்கிலும் சிறந்து விளங்கி உலகிற்கு முன்னோடியாக மூத்த இனமாக வாழ்ந்தார்கள். விஞ்ஞானம் மெஞ்ஞானம் இரண்டிலும் வல்லவர்கள். எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் உயர்ந்தவர்கள். “யாதும் ஊரே யாவரும் கேளீர்”, என்ற மாபெரும் தத்துவத்தின் உலக மக்களுக்கு உணர்த்தியவன். யாவரும் உறவினர்களே இதில் நாடு, இனம், நிறம் என்ற பாகுபாட்டிற்கு இடமில்லாமல் யாவரும் உறவினர்களே, எல்லா நாடுகளும் பண்பட்ட ஊர்களே என்ற மிகப்பெரிய உயரிய வாழ்வியல் உணர்த்தும் அறநெறியை சொன்னவன். இப்படிப்பட்ட தமிழர்களின் நிலை இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறது? சிதைந்து கிடக்கும் சமுதாயத்தை ஒன்றாக இணைப்பதே நமது வாழ் நாள் குறிக்கோலாக இருத்தல் வேண்டும். தமிழர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சமூக மற்றம்தான் என்ன?

இனம் என்பது ஒற்றை மனிதரைக் குறிப்பதல்ல. நிறைய மனிதர்கள் சேர்ந்துதான் ஒரு இனமாகவும் சமூகமாகவும் அமைகிறது. அந்த இனம் பலமாகவும் வளமாகவும் இருக்கவேண்டுமானால் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுத்தும் உதவி செய்துக்கொண்டும் இருந்தால்தான் மற்ற இனத்தவர்கள் பார்க்கும் போதும் நெருங்க நினைக்கும் போதும் சற்று யோசிக்கத் தோன்றும். இவ்வகை நன்னெறிப் பண்புகள் இல்லாத சமூகத்தை மிக எளிதில் குருவிக்கூடைக் கலைப்பதுபோல் கலைத்துவிடலாம். இத்தகைய பண்புகளே நம் சமூகத்தின் வேலியாக அமைகிறது. வேலியில்லாத் தோட்டங்களில் நாய்களும் நரிகளும் சேர்ந்தால் நாசமாகும் என்பதறியாமல் வாழ்வது தவறு. தங்களின் சகோதரத்துவத்தை வீட்டிலிருந்தும் அண்டை வீட்டுக்காரரிடத்தும் இருந்து ஆரம்பித்துக் கொள்ளுதலில் ஒரு நல்ல சமூகம் அங்கே வளர்கிறது. சிறு குழந்தைகளுக்குப் பாடமாக இருக்கும் இளைஞர்களும் பெற்றோர்களும் இதனைப் பின்பற்றினால்தானே சிறப்பான பண்புகளும் உயரிய சிந்தனைகளும் காலங்காலமாக தொடர்ந்துவரும்.

கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது நாம் அறியாத ஒன்று அல்ல. அங்கே சுகாதாரம் என்ன நிலையில் உள்ளது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். நகர்புறங்களில் அரசாங்கம் அளிக்கும் மறுத்துவ வசதிகளும் திட்டங்களும் அங்கு வசிக்கும் மக்கள் முறையாக அறிந்து தங்களின் சுகாதாரத் தரத்தை மேன்படுத்திக் கொள்வதைப் போல் கிராமத்து வாசிகள் ஏன் செய்வதில்லை. அவர்களுக்கு விருப்பம் இல்லையா? அரசாங்கம் அளிக்கும் மறுத்துவ வசதிகளும் திட்டங்களும் அங்கு வாழும் மக்களுக்குச் சரிவர விளங்காதக் காரணத்தினால்தானே அதனைப் பற்றிய விபரம் அறியாமல் கிணற்றுத் தவளையாக இருந்து சிரமப்படுகின்றனர். சுகாதாரமான சமூகம் நாளைய தலைமுறைக்குச் செழிப்பான ஆட்சியை வழங்க முடியும். ஆகவே பாமர மக்களும் அடிப்படை சுகாதார வசதியை அனுபவிக்கும் வகையில் விழிப்புணர்வு கொண்டுவருதல் வேண்டும். அதனைப் பற்றி அறிந்தவர்கள் அல்லது தலைவர்கள் தெளிவாக தெளிவுப்படுத்த வேண்டும். நமக்கு தெரிந்த ஒன்றை மற்றவர்களுக்குச் சொல்லி அவர்களையும் தெளிவுபடுத்துவதில் தமிழர்கள் வாழ்வு சிறப்பாகுமே தவிற அதில் எந்த நட்டமும் வரப்போவதில்லை. சுயநலத்தை விட்டொழித்து, மக்கள் நலன் கருத்தில் கொண்டு, சிந்தித்து எதிர்காலத்தில் வரும் தலைமுறையை வளமாக்குதல் அவசியம்.

தமிழர்களின் எதிர்காலம் இளைஞர்களிடமிருந்தே தொடங்குகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. மாயையில் இலயித்துக் கிடக்கும் இளைஞர்கள் உண்மையை உணர வேண்டும். அனுபவிக்கும் வயது அதுவாக இருப்பினும் அனுபவம் தேடி வாழ்வை வளப்படுத்தும் வயதும் அதுவே. தன்னைச் சுற்றி கடமைகள் ஆயிரம் இருப்பினும் ஏதோ ஒரு சில சின்ன தோல்விகளைக் கண்டுமனமுடைவதில் அர்த்தம் என்ன? பொதுநலத்துடன் சிந்தித்து தொடர்ந்து மோதினால் மற்றவர்களுக்காவது பாடமாகவும் வழிகாட்டியாகவும் இருக்குமே. உன்னை பார்த்துதான் நாளை உனக்கு பின் பிறந்தவன் செய்வான். அவனுக்கு நீதானே முன் உதாரணம். ஒவ்வொரு தோல்வியும் பாடமே தவிற அதைக் கண்டு அஞ்சி ஓடுவதற்கும் சோர்வடைவதற்கும் அல்ல என்பதை உணர வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி, மனம் உன்னை ஆளாமல் நீ மனதை ஆளும் சக்திகொண்டால் உலகம் உன்னை எட்டிப் பார்க்கும். இலச்சியம் என்னும் புள்ளியில் மனதைக் குவித்து, அதை அடையும் வரை அயராது உழைத்தால் வளர்ச்சி அடைந்த சமூகம் தொலைவில் இல்லை.

மற்றவர் எப்படி போனாலும் நமக்கென்ன, நாம், நமது குடும்பத்திற்கும் எந்த பாதிப்பும் வராமல் இருந்தால் போதும், என்ற எண்ணமே மிகப் பெரிய உளியாகி தமிழர்களின் சகோதரத்துவத்து உடைத்து அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்குமாறு தடை செய்கிறது. இப்படியொரு சுயநலம் கருத்தில் தோன்றினால் பாதிப்பு நம் அடுத்த தலைமுறையினருக்கே என்பதை அறிய வேண்டும். பெற்றோரின் ஒவ்வொரு செயலும் எண்ணமும் அவர்கள் குழந்தைகள் மனதில் எளிதாக பதிந்து அடுத்த தலைமுறையை ஊனமாக்கி விடுகிறது. குழந்தை வளர்ப்பு முறையில் சிறிதளவும் தவறு செய்யாமல், வளரும் போதே அவர்களைக் கொள்கைவாதியாகவும் உயர்ந்த பண்புகள் கொண்ட இலச்சியவாதியாகவும் மாற்றுங்கள். தமிழர்கள் இழந்த உரிமைகளையும் உடமைகளையும் நிச்சயம் ஒருநாள் உங்கள் பிள்ளைகள் மூலம் மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கை ஆணிவேரை அவர்கள் மனதிலும் நட்டுவைத்து உங்கள் மந்திரச் சொற்களால் உரமிடுங்கள். பின்னர் அவர்கள் எடுக்கும் முடிவு நல்லதாகவே இருக்கும்.

ஊர்க்கூடி தேரிழுத்தால்தான் தேர் நகரும். அனைவரும் ஒருங்கினைந்து நலமான வாழ்வும் வளமான சமூகமும் செய்வோம். நல்லவர் சொல்லைக் கேட்போம். நேற்று நடந்த கொடுமைகளைப் பற்றி பேச வேண்டாம், ஆனால் மறவாமல் இருந்து தவறாமல் போராடுவோம். முன்னோர்கள் தொட்டுச் சொன்னதையும் விட்டுச் சென்றதையும் கட்டிக் காப்போம். இன்று இரவு முடியட்டும். நாளை விடியல் பிறக்கட்டும். நேற்றைய நாள் நமதே. இன்றைய நாள் கொடிதே. நாளை நாள் மீண்டும் நமதே.

----

நம்பிக்கையுடன்

!!~ இரா. தமிழரசு ~!!

1 comment:

  1. மாற்றங்களைக் கொண்டு வருவோம். நான் தமிழர்.

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.