Monday, 26 March 2012

பகிர்ந்து கல்

பிடித்ததை நீ படிப்பதிலே
சுகமொன்று கண்டாய்
படித்ததை நீ பகிர்வதிலே
தவறென்ன கண்டாய்

யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம் போல்
நீர் பெற்ற இன்பம்
பெறுகட்டும் இவ்வையகத்தில்

பகிர்ந்துண்ணுதல் கற்றவர்க்கழகு
பகிர்ந்து கற்றல் இனத்திற்க்கழகு

!!~ இரா. தமிழரசு ~!!

தாய் அவள்தான்

உனக்குச் சோறு போட்ட அவள்
பசிக்கு உன் விரல் உருஞ்சுகிறாள்
வயிறு நிறம்ப...

இதைக் கண்டும் காணாமல்
நீ இருக்க
பாவக் கணக்கு நிறைந்து கிடக்கு
ஏடு முழுக்க

!!~ இரா. தமிழரசு ~!!

நம்புகிறேன் உன்னை

சிவன்
தொண்டையிலே விடம் கொண்டான்
அவனே
கங்கையிலே பாவம் சுமந்தான்

பட்டினியில் வாடும்
இலங்கையிலே பாலை சுரப்பானா?

!!~ இரா. தமிழரசு ~!!
அன்றைய சித்தாந்தம்
கங்கையிலே பாவம் கழிப்பதில் இருந்தது
இன்றைய சித்தாந்தம்
மங்கையரை கரு கலைப்பதில் இருக்கிறது

சாமியார் விந்திலா நீ பிறந்தாய்?
வீட்டிற்க்கு வந்து பெற்றோரை வணங்கு
உன் தெய்வமும் முன்பு
தாயைத்தான் வணங்கியது

நாயை அல்ல!!

நிறந்தரமல்லா மூடா!!

நான் முந்தயப் பிறப்பின் பந்தயக் குதிரையடா
இன்று வீழ்ந்தேன் மீண்டும் எழுவேன்
நீ சிரித்து மகிழ இந்த நாட்கள்
உனக்கு நான் கொடுக்கும்
ஓய்வு நாட்கள்

இது நிறந்தரம் இல்லை
மாறிவிடும் நாள்
தொலைவில் இல்லை
மூடா...

!!~ இரா. தமிழரசு ~!!

நட்பின் பால்

சேறுமிடன் தெரியாத
ஒரு நீண்ட பயணம்
இரட்டை தண்டவாளத்தின்
ஒற்றை நளினம்

ஆண்பால் பெண்பால் அறியாத
நடுநிலை உணர்ச்சி
வர்ணம் காட்டத் தெரியாத
வானவில் காட்சி

மனங்களையும் மதங்களையும் வென்ற
ஆயுதமில்லா அமைதிப்படை
மர்ம தேசத்தின் மர்மங்களை
பொருட்படுத்தாத பல்கலை

ஆசைகள் பெருக்கெடுக்க
காமம் துறவுக் கொண்ட
வண்ணமலர் சோலையின்
வண்ணத்துப் பூச்சிகள்

போலிச் சிரிப்புகளும் கேளி வார்த்தைகளும்
வேடிக்கைக்குக் கூட வெளிப்படாது
நம்பிக்கைத் துரோகமும் நையாண்டி நகைத்தலும்
நட்புக்குத் தெரியாது

காதல் படகில்
காமம் துடுப்பிழந்தாலும்
கம்பீரமாய் பயணிக்கும்
கலங்கமில்லா நட்பு வளர்க

!!~ இரா. தமிழரசு ~!!

வித்தியாசம்

போனபொழுதில் அள்ளிக்கொண்டு
பாதியைத் திண்றுவிட்டு முடியாமல்
மீதியை குப்பையிலிட்டவன்
சாப்பிடும் முன் வேண்டினான்
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்

ஒருவேளைச் சோற்றுக்கு
என்னென்னவோ பாடுபடும்
ஏழமைவாதிகள் உணவைக்கண்டால்
சொல்லக் கூட நேரமில்லை
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்

பணம் படைத்தவன் வேண்டுகிறான்
குறுக்கு வழியானாலும் கடினப்பட்டுச் சேர்த்து
வீட்டில் பூட்டி வைத்திருக்கும்
இறைவா என் பணத்தைக் காப்பாற்று

பணம் இல்லாதவன் வேண்டுகிறான்
நல்ல வழியானாலும் சிறுகச்சிறுகச் சேர்த்து
பணத்தை நிறுவனத்தின் மேல் முதலீடு செய்தவுடன்
இறைவா என் பணத்தைக் காப்பாற்று

!!~ இரா. தமிழரசு ~!!

எங்கே தர்மம்?

ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள்
கல்வி கற்காத சின்னஞ்சிறு பிஞ்சுகள்
கூரையில்லா வீடு நிறந்தரமில்லா கூடு
கூண்டோடு அழிக்கப்பட்டதே
இதில் எங்கே தர்மம் தலைகாக்கப்பட்டது

மாலையிடும் வயதில் பெண்கள்
மானபங்கம் செய்து கொல்லப்பட்டதே
காக்கைகள் மேய்கிறப் பிணங்களாய்
ஒன்றின் மேல் ஒன்றாய் எறியப்பட்டதே
இதில் எங்கே தர்மம் தலைகாக்கப்பட்டது

சினைகொண்ட விலங்கை வேட்டையிடுதல்
வேட்டை விதிக்கு முறனானதே
எங்கள் அரசர்கள் கட்டிக்காத்த கொள்கை
கற்பிணிகளை இலங்கையில் வேட்டையிட்டானே
இதில் எங்கே தர்மம் தலைகாக்கப்பட்டது

உன் பத்தாயிரம் இராணுவர்களை
மன்னித்து விட்ட கதை மறந்தாயா
மண்டியிட்டு அழுதாலும் நீ
புத்தர் தேசத்தில் மன்னிக்கப்படமாட்டாயடா!!

!!~ இரா. தமிழரசு ~!!

கற்பனை வியாபாரி!!

செம்மண் சாலையின் நிதமான ஈரம்
என் வற்றாத இளமையை
முற்றாக குடித்த
செம்பனைக்காடும் ரப்பர் தோட்டமும்

சின்னஞ்சிறு வயதில்
தெருவிற்குத் தெரு
கால்கடுக்க நடந்ததும்
இந்த செம்மண் சாலைகளில்தான்

மனமுடைந்த காளையரும் கன்னியரும்
இருக்கி அணைத்த ஆற்றங்கரைத் தென்னைமரம்
தள்ளாத முதுமையில் கிழவிகள் கொத்திய
தோப்பும் துரவுகளும்

வண்ணம் மங்கிய மாலையில்
எதிர்புற வீட்டு வாசலில்
பச்சைப் பந்தல் தோரணம்
மூத்தமகள் பூபெய்திய காரணம்

இப்படியெல்லாம் ஒவ்வொரு கிழமையில்
வெவ்வேறு காட்சிகள் கண்டு இன்புற்ற நான்
இன்று கண்கள் இருந்தும் காட்சிகள் இல்லாத
பட்டணக் கூட்டில் கற்பனை வியாபாரியாய்

!!~ இரா. தமிழரசு ~!!

நாகரீக உலகம்

பலவீனமானவன்
தப்பித்துகொண்டே ஒவ்வோரு
நொடியும் ஓடிக்கொண்டிருக்கிறான்

பலங்கொண்டவன்
அவனை ஓட ஓட விரட்டி
வாழ்வில் வெற்றிகொள்கிறான்

இயற்கை படர்ந்திருக்கிறது
அதில் எல்லைகள் பிறிவானது
இந்த நாகரீக உலகம்
எங்கே நாகரீகம் கண்டது

!!~ இரா. தமிழரசு ~!!

Sunday, 25 March 2012

வீரனாய் மரிப்போம்

மரணப் படுக்கையில் தான்
பகையாலி நண்பனாகிறான்
கெட்டவை மறக்கிறான்
மறந்தவை நினைக்கிறான்

மரணத்தின் மீது
கொண்ட பயம்
வாழும் போது
தர்மத்தின் மீதில்லை

வீரன் மட்டுமே இரண்டையும்
ஒன்றாகவே பார்க்கிறான்
ஆக மனிதனாய் பிறந்து
வீரனாய் மரித்தல் சிறந்ததுதானே

தட்டிக் கேட்கும் வரை
நீ அடிமைதான் இங்கே
வாயைத் திறந்து பேசும் வரை
மற்றவன் உனக்கு மேதைதான்

!!~ இரா. தமிழரசு ~!!

உன் வேலையைப் பார்

கழுகைப் போல் பார்வை கூரில்லை
நாயைப் போல் மூக்கும் உணர்வில்லை
ஆனால் எல்லாம் தெரிந்தது போல்
எங்கோ இருப்பவனை விமர்சிக்கிறாய் ஏன்?

உன்னை நீ அறிந்ததுண்டா
அறம் செய்து வாழ்ந்ததுண்டா
வீணான வெட்டி வேலை உனக்கு
மூச்சு முட்ட குறை சொல்வதெதற்கு?

உன் தங்கைக்குத் தங்கத்தில்
தோடு வாங்க வக்கில்லை
அடுத்தவள் காதின் தோடு
அழகாய் இல்லை என்கிறாயே

சொந்த வேலை உனக்கு
வாழ் நாள் முழுக்க இருக்கு
இன்னும் முப்பதோ நாற்பதோ வருடம்தான்
செய்து முடிக்க முடியுமா உன்னால்?

!!~ இரா. தமிழரசு ~!!

தமிழர் தேசம்

காண்பவை காட்சியென
கண்களில் சுகம் கண்டேன்
கொள்வது கோளமென
வாழ்வில் சுகம் கொண்டேன்

வாழ்வு சுகமும் ஆன்ம சுகமும்
இன்று இரண்டெனக் கண்டேன்
பல்வேறு சுகமெங்கும் பரவிக் கிடக்க
ஈழத்து சுகமென்பதே சுகமென்றேன்

வீச வேண்டும் ஒரு தென்றல்
எங்கள் தமிழர் தேசத்தில்
கேட்க வேண்டும் ஒரு இசை
எங்கள் தமிழர் தேசத்தில்

வாழ்க தமிழென
என்றொரு தேசிய கீதம்
பாடித் திரிய வேண்டும்
எங்கள் தாய் தமிழ் நாட்டில்

தமிழரைப் போல் வெறிகொண்டான் இல்லை
அவனைப் போல் நெறிகொண்டான் இல்லை
அகில உலக நாடுகளே
அவனைப் போல் வீரம் கொண்டானும் இல்லை

நூற்றாண்டுகள் ஆனாலும்
தனியாது எங்கள் தாகம்
நாடென்ற வீட்டை அடையாது
தீராது எங்கள் தாபம்

!!~ இரா. தமிழரசு ~!!

Saturday, 24 March 2012

தமிழர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சமூக மாற்றம்

தமிழர்களின் பண்டையச் சிறப்பினை சொல்லில் மட்டும் வர்ணித்திட முடியாது. ஆயக்கலைகள் அறுபத்து நான்கிலும் சிறந்து விளங்கி உலகிற்கு முன்னோடியாக மூத்த இனமாக வாழ்ந்தார்கள். விஞ்ஞானம் மெஞ்ஞானம் இரண்டிலும் வல்லவர்கள். எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் உயர்ந்தவர்கள். “யாதும் ஊரே யாவரும் கேளீர்”, என்ற மாபெரும் தத்துவத்தின் உலக மக்களுக்கு உணர்த்தியவன். யாவரும் உறவினர்களே இதில் நாடு, இனம், நிறம் என்ற பாகுபாட்டிற்கு இடமில்லாமல் யாவரும் உறவினர்களே, எல்லா நாடுகளும் பண்பட்ட ஊர்களே என்ற மிகப்பெரிய உயரிய வாழ்வியல் உணர்த்தும் அறநெறியை சொன்னவன். இப்படிப்பட்ட தமிழர்களின் நிலை இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறது? சிதைந்து கிடக்கும் சமுதாயத்தை ஒன்றாக இணைப்பதே நமது வாழ் நாள் குறிக்கோலாக இருத்தல் வேண்டும். தமிழர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சமூக மற்றம்தான் என்ன?

இனம் என்பது ஒற்றை மனிதரைக் குறிப்பதல்ல. நிறைய மனிதர்கள் சேர்ந்துதான் ஒரு இனமாகவும் சமூகமாகவும் அமைகிறது. அந்த இனம் பலமாகவும் வளமாகவும் இருக்கவேண்டுமானால் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுத்தும் உதவி செய்துக்கொண்டும் இருந்தால்தான் மற்ற இனத்தவர்கள் பார்க்கும் போதும் நெருங்க நினைக்கும் போதும் சற்று யோசிக்கத் தோன்றும். இவ்வகை நன்னெறிப் பண்புகள் இல்லாத சமூகத்தை மிக எளிதில் குருவிக்கூடைக் கலைப்பதுபோல் கலைத்துவிடலாம். இத்தகைய பண்புகளே நம் சமூகத்தின் வேலியாக அமைகிறது. வேலியில்லாத் தோட்டங்களில் நாய்களும் நரிகளும் சேர்ந்தால் நாசமாகும் என்பதறியாமல் வாழ்வது தவறு. தங்களின் சகோதரத்துவத்தை வீட்டிலிருந்தும் அண்டை வீட்டுக்காரரிடத்தும் இருந்து ஆரம்பித்துக் கொள்ளுதலில் ஒரு நல்ல சமூகம் அங்கே வளர்கிறது. சிறு குழந்தைகளுக்குப் பாடமாக இருக்கும் இளைஞர்களும் பெற்றோர்களும் இதனைப் பின்பற்றினால்தானே சிறப்பான பண்புகளும் உயரிய சிந்தனைகளும் காலங்காலமாக தொடர்ந்துவரும்.

கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது நாம் அறியாத ஒன்று அல்ல. அங்கே சுகாதாரம் என்ன நிலையில் உள்ளது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். நகர்புறங்களில் அரசாங்கம் அளிக்கும் மறுத்துவ வசதிகளும் திட்டங்களும் அங்கு வசிக்கும் மக்கள் முறையாக அறிந்து தங்களின் சுகாதாரத் தரத்தை மேன்படுத்திக் கொள்வதைப் போல் கிராமத்து வாசிகள் ஏன் செய்வதில்லை. அவர்களுக்கு விருப்பம் இல்லையா? அரசாங்கம் அளிக்கும் மறுத்துவ வசதிகளும் திட்டங்களும் அங்கு வாழும் மக்களுக்குச் சரிவர விளங்காதக் காரணத்தினால்தானே அதனைப் பற்றிய விபரம் அறியாமல் கிணற்றுத் தவளையாக இருந்து சிரமப்படுகின்றனர். சுகாதாரமான சமூகம் நாளைய தலைமுறைக்குச் செழிப்பான ஆட்சியை வழங்க முடியும். ஆகவே பாமர மக்களும் அடிப்படை சுகாதார வசதியை அனுபவிக்கும் வகையில் விழிப்புணர்வு கொண்டுவருதல் வேண்டும். அதனைப் பற்றி அறிந்தவர்கள் அல்லது தலைவர்கள் தெளிவாக தெளிவுப்படுத்த வேண்டும். நமக்கு தெரிந்த ஒன்றை மற்றவர்களுக்குச் சொல்லி அவர்களையும் தெளிவுபடுத்துவதில் தமிழர்கள் வாழ்வு சிறப்பாகுமே தவிற அதில் எந்த நட்டமும் வரப்போவதில்லை. சுயநலத்தை விட்டொழித்து, மக்கள் நலன் கருத்தில் கொண்டு, சிந்தித்து எதிர்காலத்தில் வரும் தலைமுறையை வளமாக்குதல் அவசியம்.

தமிழர்களின் எதிர்காலம் இளைஞர்களிடமிருந்தே தொடங்குகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. மாயையில் இலயித்துக் கிடக்கும் இளைஞர்கள் உண்மையை உணர வேண்டும். அனுபவிக்கும் வயது அதுவாக இருப்பினும் அனுபவம் தேடி வாழ்வை வளப்படுத்தும் வயதும் அதுவே. தன்னைச் சுற்றி கடமைகள் ஆயிரம் இருப்பினும் ஏதோ ஒரு சில சின்ன தோல்விகளைக் கண்டுமனமுடைவதில் அர்த்தம் என்ன? பொதுநலத்துடன் சிந்தித்து தொடர்ந்து மோதினால் மற்றவர்களுக்காவது பாடமாகவும் வழிகாட்டியாகவும் இருக்குமே. உன்னை பார்த்துதான் நாளை உனக்கு பின் பிறந்தவன் செய்வான். அவனுக்கு நீதானே முன் உதாரணம். ஒவ்வொரு தோல்வியும் பாடமே தவிற அதைக் கண்டு அஞ்சி ஓடுவதற்கும் சோர்வடைவதற்கும் அல்ல என்பதை உணர வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி, மனம் உன்னை ஆளாமல் நீ மனதை ஆளும் சக்திகொண்டால் உலகம் உன்னை எட்டிப் பார்க்கும். இலச்சியம் என்னும் புள்ளியில் மனதைக் குவித்து, அதை அடையும் வரை அயராது உழைத்தால் வளர்ச்சி அடைந்த சமூகம் தொலைவில் இல்லை.

மற்றவர் எப்படி போனாலும் நமக்கென்ன, நாம், நமது குடும்பத்திற்கும் எந்த பாதிப்பும் வராமல் இருந்தால் போதும், என்ற எண்ணமே மிகப் பெரிய உளியாகி தமிழர்களின் சகோதரத்துவத்து உடைத்து அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்குமாறு தடை செய்கிறது. இப்படியொரு சுயநலம் கருத்தில் தோன்றினால் பாதிப்பு நம் அடுத்த தலைமுறையினருக்கே என்பதை அறிய வேண்டும். பெற்றோரின் ஒவ்வொரு செயலும் எண்ணமும் அவர்கள் குழந்தைகள் மனதில் எளிதாக பதிந்து அடுத்த தலைமுறையை ஊனமாக்கி விடுகிறது. குழந்தை வளர்ப்பு முறையில் சிறிதளவும் தவறு செய்யாமல், வளரும் போதே அவர்களைக் கொள்கைவாதியாகவும் உயர்ந்த பண்புகள் கொண்ட இலச்சியவாதியாகவும் மாற்றுங்கள். தமிழர்கள் இழந்த உரிமைகளையும் உடமைகளையும் நிச்சயம் ஒருநாள் உங்கள் பிள்ளைகள் மூலம் மீட்டெடுக்கலாம் என்ற நம்பிக்கை ஆணிவேரை அவர்கள் மனதிலும் நட்டுவைத்து உங்கள் மந்திரச் சொற்களால் உரமிடுங்கள். பின்னர் அவர்கள் எடுக்கும் முடிவு நல்லதாகவே இருக்கும்.

ஊர்க்கூடி தேரிழுத்தால்தான் தேர் நகரும். அனைவரும் ஒருங்கினைந்து நலமான வாழ்வும் வளமான சமூகமும் செய்வோம். நல்லவர் சொல்லைக் கேட்போம். நேற்று நடந்த கொடுமைகளைப் பற்றி பேச வேண்டாம், ஆனால் மறவாமல் இருந்து தவறாமல் போராடுவோம். முன்னோர்கள் தொட்டுச் சொன்னதையும் விட்டுச் சென்றதையும் கட்டிக் காப்போம். இன்று இரவு முடியட்டும். நாளை விடியல் பிறக்கட்டும். நேற்றைய நாள் நமதே. இன்றைய நாள் கொடிதே. நாளை நாள் மீண்டும் நமதே.

----

நம்பிக்கையுடன்

!!~ இரா. தமிழரசு ~!!

தமிழரிடம் தமிழ் பேச என் பயிற்சி...

ஒவ்வொரு முறையும் தமிழரிடம் நான் பேசும்போது தவறுதலாக ஆங்கிலமோ வேறுமொழி பேசினாலோ, என் உதடுகளை நானே அறைந்துக்கொள்வேன். இப்படித்தான் என் மொழியை, என் தாய் தமிழை நான் வளர்க்கிறேன்.

உங்களை யாரும் செந்தமிழ் பேசச் சொல்லவில்லை, தமிழ் பேசுங்கள் போதும். தமிழ் நம் வாழ்க்கை மொழியாக இருக்கட்டும். செந்தமிழ் பாடமாக இருக்கட்டும். நீங்கள் எப்படி உங்கள் தாய் தமிழை வளர்க்கப் போகிறீர்கள்?

!!~ இரா. தமிழரசு ~!!

Thursday, 8 March 2012

மனதோசை!!


ஊண் உறக்கம் இல்லாமல்
உடல் தேய உழைத்தாலும்
இல்லை ஒரு பயனுமே
இரவோடு மனம் வாடுதே

என்ன கொடுமை இது
வாய்க்கும் வயிறுக்கும்
என்றெண்ணும் போதெல்லாம்
கோபம் வந்து பின் நொந்ததே

மெய்ஞானப் படகில் விஞ்ஞானப் பயணம்
எல்லையில்லா கற்பனையில் வண்ணமில்லா வாழ்க்கை
எமலோகம் ஆனாலும் இதுபோல இராதே
சுயநலக் கிடங்கான இந்த அவலோகமே

எந்நாளும் வருமானம் வேண்டுமென
தன்மானம் இழக்கவைக்கும் இந்த
அவமான வாழ்க்கையை விட்டொழித்து
சிவஞானம் வேண்டுமென மனம் ஏங்குதே

!!~ இரா. தமிழரசு ~!!

வெளிச்சம் வரட்டும்

வெளிச்சம் வரட்டும்

வெள்ளம் வந்து வெட்டவெளி ஆனாலும்
வெள்ளிக்கிழமை அட்டவணை மாறாது
வெந்ததுபோய் நொந்ததுபோய் கிடந்தாலும்
... வெள்ளை வேட்டி உதவிக்கு வராது

கல்வியை சீர்திறுத்தப் போகிறதாம்
திக்குமுக்காடும் முட்டாள் கழகம்
வறுமைக்கு உணவளிக்கப் போகிறதாம்
அன்றே திண்று முடிக்கும் கழகம்

என்ன எழுதி கிழித்தாலும்
இந்த நாடு என்றும் செழிக்காது
விழுங்கி முடித்து ஏப்பமிடும்
பூதங்கள் உள்ளவரை

மாங்கு மாங்கென கத்தினாலும்
அவர்கள் காதுகளுக்கெட்டாது
பொன்னோ பொருளோ பதிலுக்கு
லஞ்சமாகக் கொடுக்கும் வரை

ஏழமை தீர்ப்பேன் உணவு கொடுப்பேன்
தண்ணீர் திறப்பேன் என்பன பிரச்சார நாடகம்
கண் காதுகளை நம்பிக்கெட்டு சாகாமல்
கை காள்களை நம்பி உழை மனம் தளராமல்

மோதிரத்தோடு உனக்கு விரலுமா தொலைந்தது?
இல்லை என்றால் இன்னும் ஒன்று வாங்கு
நம்பிக்கெட்டவர்கள் மதிகெட்டா போனார்கள்?
இல்லை என்றால் மீண்டும் உன்னை நம்பு

!!~ இரா. தமிழரசு ~!!

Sunday, 4 March 2012

ஏன்?

எண்ணிய எண்ணமெல்லம்
எண்ணாதவர்க்கும் எட்டும்வரை
என்னாளும் எடுத்துரைத்தேன்

எண்திசை எட்டுவதர்க்கு
எந்தமிழ் எழுத்துருவில்
ஏடுகளிளும் ஏற்றிவைத்தேன்

எம்மையும் எழுத்தாளனென
ஏற்றுக்கொண்ட எம்மக்கள்
என் எழுத்துக்களில் ஏங்கும் எண்ணங்களை
எல்லளவும் எண்ணவில்லையே ஏன்?

!!~ இரா. தமிழரசு ~!!

யார் தொலைத்தார் நிம்மதியை


யார் தொலைத்தார்
இந்த நிம்மதியை
ஏன் தேடுகிறீர்
தொலையாத நிம்மதியை

நிம்மதி
அது உனக்குள்ளே இருக்கு

கவலைகள் தேங்கி இருக்குமாயின்
சலனங்கள் மூடி கிடக்குமாயின்
ஆசைகள் அலைமோதித் திறியுமாயின்
மனம் எப்படி நிம்மதியை உணரும்

மறந்துவிடாதே
உனக்கு கிடைத்ததே அதிகம் என்பதை
கவலை, சலனம், ஆசை இவை
அனைத்தும் மரணத்தின் ஓசை

மனதின் குப்பைகளை அகற்றிவிட்டு வாருங்கள்
அப்போது தெரியும் பயணத்தின் தூரம்
பயணத்தின் வழி காட்சிகளின் இன்பம்

யார் தொலைத்தார் நிம்மதியை
முப்பொழுதும் தேடிக்கொண்டிருக்க!!

!!~ இரா. தமிழரசு ~!!

எங்களைக் காட்டிக்கொடுக்காதீர்!!

எங்களைக் காட்டிக்கொடுக்காதீர்!!

அரசியல்வாதிகள்
புன்னகை தேசத்து
பூக்கள் நாங்கள்
என்கிறார்கள்

எங்களைப் பெற்றவர்கள்
என்னில் இருக்கும்
எனதுயிர் சுவாசம்
என்கிறார்கள்

எங்கள் நண்பர்கள்
நிஜத்தில் வாழும்
நிழல்கள் போல
என்கிறார்கள்

ஆனால் நாங்களோ
காமத்தில் பிறந்த
கருமம் என்பதைவிட
வேறென்ன சொல்ல முடியும்

எங்கள் குறல்
நல்ல உள்ளங்களுக்கு
கேட்குதோ இல்லையோ
முதலாளிகள் காதுகளுக்கு எட்டி
எல்லை தாண்டி போகாது
எட்டி உதைக்கின்றனர்

எங்களைக் காப்பாற்ற வேண்டாம்
வேலைக்கு இப்படி ஒரு
குழந்தை உண்டு என்பதை
காட்டிக்கொடுக்க வேண்டாம்

எங்கள் அன்புமிக்க
தம்பிகளைக் காப்பாற்றுங்கள்!!

!!~ இரா. தமிழரசு ~!!

தமிழ்

தமிழ் வாழ வேண்டும்
இனி
அதன் நிறம் மாற வேண்டும்
ஒவ்வொரு பயிரிலும்
அது உறமாக வேண்டும்
தினம் உண்ணும் உணவில்
பருப்பாக வேக வேண்டும்...

!!~ இரா. தமிழரசு ~!!

நடை போடு

கனவுகள் ஆயிரம் வருகின்றன
ஒன்று கூட பலிப்பதில்லை
இருப்பினும் கனவு காண்பதை விடுவதில்லை

ஆனால் ஒன்று மட்டும் உண்மை...
இன்றைய பொழுது முடியும்
நாளை பொழுது விடியும்

கனவுகளை எண்ணி புலம்பாமல்
நினைவுகளை எண்ணி வருந்தாமல்

அராஜக மண்ணில்
வீரநடை போடு
எதிர்ப்புகளைக் கடந்து
ராஜநடை போடு
தோல்விகள் அடைந்தால்
தொட்டாச்சினுங்கி போல் சினுங்காதே
குதிரையைப்போல் எழுந்தோடு!!

!!~ இரா. தமிழரசு ~!!

செவ்வியச் சிலை கண்மணியே!

நட்ட நடு நிசியினிலே
ஆழ் துயில் காணும் கண்மணியே
ஈரம் கொண்ட மலரினிலே
தேகம் தான் படுக்க வந்தாயோ

தமிழும் இசையும் சேர்ந்தே பெய்த மழையில்
தேகம் அனைத்தும் நனைந்து வந்த பொன்மணியே
நகமும் சதையும் கொடுத்த கொஞ்ச இடையில்
புறமும் பகையும் மறந்து காதல் கொள்வோம்

பூவிழுந்த சாலையிலே தென்ற்ல் வரும்
பனி இறங்கும் காலையிலே இன்பம் தரும்
மலர் கொடுத்த போர்வையிலே மின்ன மின்ன
துயில் துறப்பாய் கண்மலர்ந்தே மெல்ல மெல்ல

ஒற்றை காலில் நீ காற்றில் ஆட
சற்றே காற்றில் நான் காவியம் பாட
தொடர்வது முடிவதற்கே என்பது மறந்து
முடிவது தொடர்வதற்கே என்று எண்ணுவோம்

!!~ இரா. தமிழரசு ~!!

எங்கள் பள்ளிக்கூடம்

ஏழை பணக்காரன் எனும்
வேறுபாடில்லாத புன்னகை தேசம்
கருப்பு வெள்ளை எனும்
வண்ணம் இல்லாத மாணவர் தேசம்

கயிறை கோடாக இழுத்து
கபடி ஆடிய மண்தரை
இன்னமும் மாறாது
மாற்றத்திற்கு ஏங்கும் வெறும் தரை

ஒன்றாம் வகுப்பு கூரையின் முனையில்
கிளை விழுந்து உடைந்த பாகம்
இன்று நான் போய் பார்த்த போது
அச்சு பிசுராது அப்படியே சிரித்தது

மாறாதிருப்பது கற்றலும் கற்பித்தலும்
மாறியிருப்பது கற்றவர்களும் கற்பித்தவர்களும்
யாராவது பணம் கொடுத்தால்
வெளிச்சுவரில் வெள்ளை அடிக்கப்படும்
உள்சுவரில் மாணவர்களின் படைப்புகளால் மறைக்கப்படும்

ஏன் இந்த அவலநிலை?
ஆயிரமாயிரம் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்
இன்று ஆதரவற்று அனாதையாக

!!~ இரா.தமிழரசு ~!!
நட்ட நடு நிசியினிலே
சுற்றும் பனி படர
சற்றே தொலைவினிலே
காற்றும் நெருடிவர

கலங்கிய பொய்கையிலே
நிலவின் முகம் சிரிக்க
கொஞ்சும் தமிழிடத்தில்
உன் மௌனம் சண்டையிட

மலரெடுத்து முகிலெடுத்து
கொஞ்சம் நடையெடுத்து
இருளின் நார் எடுத்து
நாணம் சரம் தொடுத்து

உன் காதலைச் சொல்கயிலே
என் கண்ணீர் கவிதைகளானது
கனவுகள் நிஜங்களானது
அன்றிரவு நம் இருவருக்கானது

!!~ இரா. தமிழரசு ~!!